Saturday, September 12, 2009

தமிழ்நாட்டுப் பயணம் -- 2

மதுரையில் ஒரு நாள்
செவ்வாய் 20090818

நேற்றுதான் மதுரைக்கு வந்து சேர்ந்தேன், ஒரு நாளில் பெரிசா என்னத்தை கிழிச்சிடப்போறேன். இன்னிக்கு முழுக்க சோபாவில உட்கார்ந்துகிட்டே பொழுதை ஓட்டிடணும்ங்கிறது என்னோட திட்டம். காலையில 6 மணிக்கு கரண்ட் கட் ஆனதுனால உடனே எழுந்து என்ன செய்றதுன்னு தெரியாம ஒரு வாக்கிங் போலாம்னு கிளம்பினேன். காந்திநகரிலிருந்து பெரியாஸ்பத்திரி வழியாக தேவர் சிலையைக் கடந்து 1985க்கு முன்பு நான் பிறந்து வளர்ந்த கோரிப்பாளையம் தெருக்களில் நடக்கும் போது எனக்கு புல்லரித்துவிட்டது. 20 ஆண்டுகளுக்கு பிறகு இப்பொழுதுதான் பார்க்கிறேன், எனக்கு எல்லா தெருக்களும் குறுகலாகவும் நீளம் குன்றியும் உள்ளதாகத் தோன்றியது. பிறந்து வளர்ந்த வீட்டுக்கு அருகில் நின்று கொஞ்சநேரம் பழைய ஞாபகங்களை அசைபோட்டுவிட்டு நடையைத் தொடர்ந்தேன்.

அங்கிருந்து ராஜாஜி பூங்காவிற்கு வந்தால் ஒரே அதிர்ச்சி--பூங்காவில் பலர் உடற்பயிற்சி செய்துகொண்டும், வாக்கிங் போய்க்கொண்டும், தியானித்துக்கொண்டும் இருப்பதைப் பார்த்து பரவாயில்லையே இங்கு கூட fitness பற்றி எண்ணக்கூடியவர்கள் இருக்கிறார்களே என்று நினைத்து பெருமையாக இருந்தது. அதில் ஒரு 65 வயது முதியவர் என்னைப் பார்த்து, "தம்பி, உங்களை இது நாள் வரை இங்க பார்த்ததில்லையே," என்றார். அவரோடு சில நேரம் பேசியதில் அவருக்கு 86 வயதுதான் ஆகிறது என்று தெரியவந்தது. இந்த வயதில் மங்கிபாரில் ஏதோ லிஃப்டில் போவதுபோல் அநாயசமாக மூன்று முறை கைகளாலேயே அவர் போய்வந்தது என்னை வியக்கச் செய்தது. இனி ஜிம்முக்குப் போவதற்கு சோம்பல் பட்டு எந்த சாக்கைச் சொன்னாலும் அது நொண்டிச்சாக்குதான் என்பது என் மனசாட்சிக்குத் தெரிந்துவிடுமே!

வீடுவந்து சேர்ந்தவுடன் அங்கிருந்த செய்தித்தாள்களைப் புரட்டியபோது ஏதோ ஒரு பெரிய மாற்றம் இருப்பது தெரிந்தது. எப்பொழுதும் இந்து நாளிதழும், தினமணியும் இருக்குமே, இங்கு இந்துவிற்குப் பதில் இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் எப்படிவந்தது என்று எனக்குப் புரியவில்லை. இருந்தாலும் யோகா முடித்துவிட்டு வந்த என் அப்பவிடம் கேட்டுவிட்டேன். வேகமாக பாத்ரூமிற்கு போய்க்கொண்டிருந்தவர் சட்டென்று திரும்பி என்னருகே அமர்ந்துகொண்டு ஒரு பெருமூச்சு விட்டார். எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து எங்கள் அப்பா வாராவாரம் ஆண்டிபட்டி வட்டாரத்தில் ஏதாவது ஒரு கிராமத்திற்குப் போய் இலவச மருத்துவ முகாம் நடத்திவருகிறார். போன ஞாயிற்றுக்கிழமைகூட சக்கம்பட்டிக்குச் சென்று வந்திருக்கிறார். வயது எழுவதைத் தாண்டிவிட்டதால் உடல் நலம் கருதி பொது நலத்தைக் கொஞ்சம் குறைத்துக்கொள்ளச் சொல்லவேண்டும் என்று நினைத்த என்னைப் பேசவிடவில்லை அவர். பொருமையாக ஒவ்வொரு சொல்லிலும் தெளிவுபட சொன்னார், "இந்த ஈழப் போராட்டத்தின் போது, களத்தில் நடக்கும் உண்மைகளையும், அங்கு மக்கள் படும் கொடுமையான அவஸ்தைகளையும் ப்ரின்ட் பண்ணாவிட்டால் கூட பரவாயில்லை; அப்படியே கம்ப்ளீட்டா இலங்கை இந்திய ரத்த வெறிக்கு உடந்தையா இருந்தான் இந்த இந்துப் பத்திரிக்கைகாரன். அங்க ஒன்னுமே நடக்கலைங்கிற மாதிரி எழுதி எல்லாரையும் இளிச்சவாயன் ஆக்கிட்டான். They displayed an utter lack of journalism. இவன் நியூஸ்பேப்பரை வாங்குறது நம்மள நாமே கம்மியா எடைபோடுறதுக்கு சமம். அந்தக்காலத்துல பிரிட்டிஷ்காரனை நக்கிப் பிழைச்சமாதிரி; let him go to hell." அப்பப்பா, பொது நலம் பொது நலம் என்று வாராவாரம் இன்னும் அலைகிறவரின் உள்ளத்தில் இவ்வளவு ஆழமாக இந்துவைப் பற்றிய இப்படி ஒரு கணிப்பு ஏற்பட்டிருக்கிறதென்றால், அப்பத்திரிக்கை ரொம்ப one-sided ஆக நடந்து செய்திகளுக்குப் பதிலாக, கவர்மென்ட்டின் பிரச்சாரஒலியாக செயல் பட்டிருக்குமோ என்ற ஐயம் எனக்கும் ஏற்பட்டது.

சில மணி நேரங்களுக்குப் பிறகு, Kinetic-Honda மாதிரியான ஒரு ஸ்கூட்டியை ஓட்டிக்கொண்டு எனது தங்கை (சித்தி மகள்) வந்திருக்கிறாள்போலும். அத்தை! அத்தை! என்று வீட்டிலிருந்து கவினும் இசையும் பெரும் கூச்சலும் ஆரவாரமும் மணியோசைபோல் முந்தியது. அவள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பே, கவினும் இசையும் அவளது ஸ்கூட்டியில் போய் உட்கார்ந்து விட்டனர். இவன்களை ஒரு இரண்டு ரவுண்டு அடித்து கூட்டி வந்தபின்புதான் எனாலே அவளை சந்திக்க முடிந்தது.

ஒரு சோலியாக கிழக்கு வாசல் பக்கம் போனபோது நான் படித்த தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி (St. Mary's Higher Secondary School) வழியாக செல்ல நேர்ந்தது. உடனே செல்போனில், என்னோடு பள்ளிக்குச் சென்ற நண்பர்களின் நெம்பர்கள் அனைத்தையும் டயல் செய்துவிட்டேன். ஆறு பேரோடு பேசினாலும், அதில் அஸ்வின் தேசாய் என்னும் நண்பன் ஒருவனைத்தான் சந்திக்க முடிந்தது. மதுரையில் A & T Technologies என்று ஒரு நிறுவனம் நடத்திவருகிறான், அவனை அங்கேயே சென்று பார்த்து பழைய நினைவுகளை அசைபோட்டேன். எங்களோடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படித்த எம்.எஸ்.சுந்தர், டி.கே.சிவகுமார், ஜோசஃப் ராஜ்குமார், ஐசக் ராஜேந்திரன், இன்னொரு பாலா, வீரா, கார்திகேயன், நோபிள், சண்முகசிகாமணி, டோனி ஜோசஃப் (the T in A & T), ஸ்ரீதேவி, ராதா, மேகலை, லைஜுமால், என்று பலரின் இன்றைய சூழல் பற்றி சுவையாகப் பேசித்தீர்த்தோம். ரமேஷ் (பான்சா), நரசிம்மன் (நர்சி) இந்த இருவராலும் வரமுடியவில்லை. சில நாள் கழித்துதான் தெரியும் பான்சா வீட்டில் பலருக்கும் பன்றிக்காய்ச்சல் என்று! இப்போது அனைவரும் நலம், அன்று சந்திக்கமுடியவில்லையே என்றுதான் வருத்தம். Maybe, next time.

வீடுவந்ததும் அம்மா, "நளை ஊருக்குப் போயிட்டு வரலாமா. அங்க அண்ணன் கட்டிக்கொடுத்த ஸ்கூல் ஹெட்மாஸ்டர் இப்பதான் பேசினாங்க, ஊருக்கு வந்தா அங்க பள்ளி மாணவர்களுக்கு ப்ளஸ் டூ எவ்வளவு முக்கியம்ங்கிறதைப் பத்தி ரெண்டு வார்த்தை நீ பேசணும்னு சொன்னாங்க," என்று சாப்பிடும்போது சொன்னார்கள். சரி நாளையும் ஒரு ஃபுல் டே தான் என்று எனக்குத் தோன்றியது.

இசை கண்டிப்பாக தாயம் விளையாடவேண்டும் என்று சொன்னான். இவனுக்கு பாட்டியுடன் தாயம் விளையாடி அந்த விளையாட்டு பிடித்துவிட்டது. தாயம் விளையாடியதைவிட அதை எப்படி விளையாடவேண்டும் என்று எனக்கு இசை சொல்லிக்கொடுத்ததை என்னால் மறக்கமுடியாது. சந்தடி சாக்கில், "தாயம் is not like snakes-and-ladders, dice roll பண்ணி சும்மா move பண்ணுற game இல்லை; தாயத்துல strategy இருக்கு, so கவின் விளையாடக்கூடாது (விளையாடமுடியாது என்பதை அப்படிச் சொல்கிறான்)," என்று தனது 4 வயது தம்பியைவிட தனக்கு அதிகம் தெரியும் என்று பீற்றிக்கொண்டான். இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை, நாளை கிராமத்துல யாரு நல்லா சமாளிக்கிறான்னு பாக்கணும் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.

தி. சுப்புலாபுரம், சத்திரப்பட்டி, குற்றாலம், கல்லணை, திருச்சி (மீண்டும் மதுரை) விவரங்கள் இனி ...

Friday, September 11, 2009

தமிழ்நாட்டுப் பயணம் -- 1

நியூயார்க்கிலிருந்து சென்னைவரை ....

"காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி.." என்று வைதேகி காத்திருந்தாள் படத்தில் ஒரு பாட்டு இருக்கிறது; ஒருவழியாக ஆகஸ்ட் 15 வந்து லண்டன் வழியாக சென்னைக்குப் போக வண்டியில ஏறியாச்சு. JFKவில தான் எக்ஸ்ரே எல்லாம் எடுத்து பாதுகாப்பு பரிசோதணை பண்ணிட்டு தான் வண்டில ஏத்துறானே, லண்டன் போனதும் அவிங்க வேற என்னத்துக்கு செக்யூரிட்டின்னு புடுங்குறாங்கன்னு தெரியல. ஒருவேளை இங்கிலாந்துகாரனை அமெரிக்காவுல இப்படித்தான் கழுத்தறுக்குறாங்களோ என்னமோ.

சென்னை வந்து இசை, கவின், பிரபா, அக்கா, அர்ஜுன் எல்லோரையும் விமானநிலையத்துலயே பாத்ததுல ரொம்ப மகிழ்ச்சி. கார்ல பொடியன்கள் இரண்டுபோரும் முன் சீட்டுல உட்கார்ந்து சென்னையில ரோட்டுல உள்ள ஆட்டோவில இருந்து நகரப் பேருந்து வரை ஒவ்வொன்னையும், அக்கா வீட்டுக்கு வந்து சேருற வரைக்கும் எனக்கு விளக்கிக்கிட்டே வந்தானுங்க. ஒன்னரை மாசத்துக்கு முன்னாலேயே வந்த்துட்டதுனால, புதுசா வந்திருக்கிற எனக்கு சொல்லித்தர்றானுகளாம்! அவுங்களோட உற்சாகம் எனக்கு பயணக்களைப்பை சுத்தமா காலி பண்ணிடிச்சு.

என்னை விமான நிலையத்திலேயே பார்பதற்காக விடியற்காலை 4 மணிக்கே எழுந்ததினால் பசங்க இரண்டுபேரும் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு கொஞ்சம் ஆட்டம் போட்டுவிட்டு தூங்கிவிட்டான்கள். காலையிலேயே நானும் பிரபாவும் நீலாங்கரையில இருக்கிற அவளது தங்கையின் வீட்டுக்குப்போய் அவளையும் அவளது கணவர் அசோக்கையும் பார்க்க முடிந்தது. மதுரையில் புதிதாக ஒரு கடை திறந்திருப்பதால் கொஞ்சம் பிசியாக இருப்பதாக சொன்னார். அப்போதுதான் போத்தீஸ் மதுரையில் திறந்திருப்பது எனக்குத் தெரியவந்தது. "சன் டீவில ரொம்ப நாளா சத்தியராஜ்-சீதா வச்சு ஒரு விளம்பரம் கொடுத்திருக்கோமே, நீங்க பாக்கலியா?" என்றார் அசோக் தம்பி. அமெரிக்கவுல எங்ககிட்ட DVR இருக்கிறது என்றும் அதற்கு ஒரு hack போட்டு அதிக சத்தம் வரும் கமர்சியல்களை play பண்ணும்போது தானாகவே skip பண்ணிடுவோம்னு தெளிவுபடுத்தினேன். அதுவேற இந்தக் கொம்பனுங்க அமெரிக்காவுல சன் டிவீயெல்லாம் பாக்கமாட்டானுங்களாமுன்னு நினைச்சிடக்கூடாதில்லையா!

அக்கா வீட்டுக்கு திரும்ப வந்து கொஞ்சநேரம் ஓய்வெடுத்துட்டு, கல்லூரித் தோழி விஜிக்கு போன்பேசி அன்று பாக்கலாமான்னு கேட்டேன். எப்போதும் மெருகு குறையாத ஆர்வத்துடன் விஜி பேசியது மட்டுமில்லாமல் உடனடியாக சுபியையும் கலந்து மதியம் சந்திக்கலாமென்று சொன்னாள். வாயில நுழையமுடியாத ஒரு பேருவெச்ச சின்ன மாலுக்குள்ள இருக்குற ஒரு காப்பி கடையில போய் நான், பிரபா, விஜி, சுபி எல்லோரும் உட்கார்ந்தோம். உடனே ஒன்னு தெளிவாயிடுச்சு--அங்க சுபி மட்டும் தான் ஐக்கியமாக முடியும். அங்க வந்திருக்கிறவன் எல்லாமே யூத்து, ஆளாளுக்கு ஜோடி ஜோடியா திங்கக்கிழமை ம்த்தியானம் கட்டடிச்சிட்டு டைம்பாஸ் பண்ணிட்டிருந்தான். காப்பி குடிச்சிட்டு கடலை போடுற மும்முரத்துல எங்களை யாருன் சட்டைபண்ணல. ஏதாவது சாப்பிட சொல்லலாம்னு பாத்தா, சுபி ஒரு பர்கர் வாங்கிட்டு அதுல ரொட்டியமட்டும்தான் திம்பேன்னு சொல்றா, ஒரு காலேஜுக்கு போற பொண்ணோட அம்மான்னு சொல்றதவிட இவளே காலேஜுக்கு போறாளோன்னு நினைக்கிற மட்டுல எப்படி இருக்கான்னு அப்ப தான் புரியுது. நான் விடல, பிரபாவுக்கு அவ்வளவு விருப்பமில்லவிட்டாலும் அவளுக்கும் சேர்த்து இரண்டு ஐஸ்க்ரீம் வாங்கி இரண்டையும் நானே ஜமாய்ச்சுட்டேன்.

REC alumni தான் தங்களோட கல்லூரிக்கு சரியா ஆதரவளிக்கறதில்லை என்பது பற்றி விஜி ஒரு கச்சேரியே பண்ணிவிட்டாள். அவள் சொல்லுவதிலும் ஒரு விதத்தில் நியாயம் உண்டு. சென்னையில் உள்ள கல்லூரி விழாக்களுக்கு முக்கிய பிரமுகர்கள் வருவதற்கு ஒரு செலவும் ஆகிவிடாது, அதனால் அவர்களுக்கு பிரபலமான சினிமாக்காரர்களும், அரசியல் மற்றும் அரசாங்க
பிரமுகர்களும் விழாக்களுக்கு வந்து அதை ஒரு செய்தியாக்கி கல்லூரிக்கு விளம்பரம் தருகின்றனர். திருச்சிக்கு இந்த செலிப்ரிட்டிகள் வருவதென்றால், பிரயாணச் செலவு, தங்குவதற்கு செலவு என்று பல செலவுகள் உள்ளதால், நமது Festember விழா நடத்த மிகுந்த செலவு செய்ய வேண்டியுள்ளதாகவும், ஐஐடி மற்றும் அண்ணா பல்கலை போன்று நமது பழம் மாணவர்கள் அவ்வளவாக உதவுவதில்லை என்றும் தற்போதைய மாணவர்கள் அங்கலாய்க்கிறார்களாம். பழைய மாணவர்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவுவார்கள், எளிய மாணவர்களின் படிப்பிற்கு உதவுவார்கள், ஏன் நன்றாகப் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும்படி ஒரு பாண்டித்தியம் அளிக்க முன்வருவார்கள், ஆனால் Festember போன்ற ஒரு கூத்திற்கு காசு கொடுப்பார்களா என்பதில் எனக்கு சந்தேகம்தான்.

அது போக, பழைய கல்லூரி நண்பர்கள் எங்கு எப்படி இருக்கிறார்கள் என்றும், BArch பொன்னம்மா எப்படி அலங்காரியாக மிதந்து வந்துபோனாள் என்பது பற்றியும் (வேறு யார்) விஜி ஒரு அப்டேட் செய்தாள். நமது பமீளா பார்க்க வந்து பறந்து சென்றதைப்பற்றியும் ஒரு அசை போட்டாள். குழந்தைகளைபற்றியும் பேச்சு திரும்பியது. தங்களது மக்களைப் பற்றி மட்டுமில்லாமல், வீணா, மீனாட்சி, சாதனா, கிக்கர் என்று பலரின் வாரிசுகளைப் பற்றியும் நல்லபடியாகப் பேச்சு சுற்றிவந்தது.
அடுத்தமுறை வரும் போது கண்டிப்பாக குடும்பச் சூழலில் சந்திக்கவேண்டும் (ஒருவரது இல்லத்தில்) என்று புரியும்படியாக பலமுறை விஜியும் சுபியும் சொல்லிவிட்டார்கள். கண்டிப்பாக முயற்சிப்போம்.

அன்று இரவே இசை, கவின், பிரபாவுடன் நான் மதுரைக்குச் சென்றுவிட்டேன். சந்தித்து இரண்டு ஆண்டுகள் ஆகியபடியால், நானும் எனது அப்பாவும் அம்மாவும் விமான நிலையத்திலிருந்து வீட்டுக்குப் போவதற்குள் எத்தனையோ செய்திகளைப் பேசிவிட்டோம். வீட்டிற்கு வந்து இன்னும் நிறைய கதைகளைக் கேட்டும் கூறியும் கடைசியில் தூங்குவதற்கு (காலை) ஒரு மணிக்கும் மேல் ஆகிவிட்டது.

மதுரை, தி. சுப்புலாபுரம், சத்திரப்பட்டி, குற்றாலம், கல்லணை, திருச்சி விவரங்கள் இனி ...