Friday, September 11, 2009

தமிழ்நாட்டுப் பயணம் -- 1

நியூயார்க்கிலிருந்து சென்னைவரை ....

"காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி.." என்று வைதேகி காத்திருந்தாள் படத்தில் ஒரு பாட்டு இருக்கிறது; ஒருவழியாக ஆகஸ்ட் 15 வந்து லண்டன் வழியாக சென்னைக்குப் போக வண்டியில ஏறியாச்சு. JFKவில தான் எக்ஸ்ரே எல்லாம் எடுத்து பாதுகாப்பு பரிசோதணை பண்ணிட்டு தான் வண்டில ஏத்துறானே, லண்டன் போனதும் அவிங்க வேற என்னத்துக்கு செக்யூரிட்டின்னு புடுங்குறாங்கன்னு தெரியல. ஒருவேளை இங்கிலாந்துகாரனை அமெரிக்காவுல இப்படித்தான் கழுத்தறுக்குறாங்களோ என்னமோ.

சென்னை வந்து இசை, கவின், பிரபா, அக்கா, அர்ஜுன் எல்லோரையும் விமானநிலையத்துலயே பாத்ததுல ரொம்ப மகிழ்ச்சி. கார்ல பொடியன்கள் இரண்டுபோரும் முன் சீட்டுல உட்கார்ந்து சென்னையில ரோட்டுல உள்ள ஆட்டோவில இருந்து நகரப் பேருந்து வரை ஒவ்வொன்னையும், அக்கா வீட்டுக்கு வந்து சேருற வரைக்கும் எனக்கு விளக்கிக்கிட்டே வந்தானுங்க. ஒன்னரை மாசத்துக்கு முன்னாலேயே வந்த்துட்டதுனால, புதுசா வந்திருக்கிற எனக்கு சொல்லித்தர்றானுகளாம்! அவுங்களோட உற்சாகம் எனக்கு பயணக்களைப்பை சுத்தமா காலி பண்ணிடிச்சு.

என்னை விமான நிலையத்திலேயே பார்பதற்காக விடியற்காலை 4 மணிக்கே எழுந்ததினால் பசங்க இரண்டுபேரும் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு கொஞ்சம் ஆட்டம் போட்டுவிட்டு தூங்கிவிட்டான்கள். காலையிலேயே நானும் பிரபாவும் நீலாங்கரையில இருக்கிற அவளது தங்கையின் வீட்டுக்குப்போய் அவளையும் அவளது கணவர் அசோக்கையும் பார்க்க முடிந்தது. மதுரையில் புதிதாக ஒரு கடை திறந்திருப்பதால் கொஞ்சம் பிசியாக இருப்பதாக சொன்னார். அப்போதுதான் போத்தீஸ் மதுரையில் திறந்திருப்பது எனக்குத் தெரியவந்தது. "சன் டீவில ரொம்ப நாளா சத்தியராஜ்-சீதா வச்சு ஒரு விளம்பரம் கொடுத்திருக்கோமே, நீங்க பாக்கலியா?" என்றார் அசோக் தம்பி. அமெரிக்கவுல எங்ககிட்ட DVR இருக்கிறது என்றும் அதற்கு ஒரு hack போட்டு அதிக சத்தம் வரும் கமர்சியல்களை play பண்ணும்போது தானாகவே skip பண்ணிடுவோம்னு தெளிவுபடுத்தினேன். அதுவேற இந்தக் கொம்பனுங்க அமெரிக்காவுல சன் டிவீயெல்லாம் பாக்கமாட்டானுங்களாமுன்னு நினைச்சிடக்கூடாதில்லையா!

அக்கா வீட்டுக்கு திரும்ப வந்து கொஞ்சநேரம் ஓய்வெடுத்துட்டு, கல்லூரித் தோழி விஜிக்கு போன்பேசி அன்று பாக்கலாமான்னு கேட்டேன். எப்போதும் மெருகு குறையாத ஆர்வத்துடன் விஜி பேசியது மட்டுமில்லாமல் உடனடியாக சுபியையும் கலந்து மதியம் சந்திக்கலாமென்று சொன்னாள். வாயில நுழையமுடியாத ஒரு பேருவெச்ச சின்ன மாலுக்குள்ள இருக்குற ஒரு காப்பி கடையில போய் நான், பிரபா, விஜி, சுபி எல்லோரும் உட்கார்ந்தோம். உடனே ஒன்னு தெளிவாயிடுச்சு--அங்க சுபி மட்டும் தான் ஐக்கியமாக முடியும். அங்க வந்திருக்கிறவன் எல்லாமே யூத்து, ஆளாளுக்கு ஜோடி ஜோடியா திங்கக்கிழமை ம்த்தியானம் கட்டடிச்சிட்டு டைம்பாஸ் பண்ணிட்டிருந்தான். காப்பி குடிச்சிட்டு கடலை போடுற மும்முரத்துல எங்களை யாருன் சட்டைபண்ணல. ஏதாவது சாப்பிட சொல்லலாம்னு பாத்தா, சுபி ஒரு பர்கர் வாங்கிட்டு அதுல ரொட்டியமட்டும்தான் திம்பேன்னு சொல்றா, ஒரு காலேஜுக்கு போற பொண்ணோட அம்மான்னு சொல்றதவிட இவளே காலேஜுக்கு போறாளோன்னு நினைக்கிற மட்டுல எப்படி இருக்கான்னு அப்ப தான் புரியுது. நான் விடல, பிரபாவுக்கு அவ்வளவு விருப்பமில்லவிட்டாலும் அவளுக்கும் சேர்த்து இரண்டு ஐஸ்க்ரீம் வாங்கி இரண்டையும் நானே ஜமாய்ச்சுட்டேன்.

REC alumni தான் தங்களோட கல்லூரிக்கு சரியா ஆதரவளிக்கறதில்லை என்பது பற்றி விஜி ஒரு கச்சேரியே பண்ணிவிட்டாள். அவள் சொல்லுவதிலும் ஒரு விதத்தில் நியாயம் உண்டு. சென்னையில் உள்ள கல்லூரி விழாக்களுக்கு முக்கிய பிரமுகர்கள் வருவதற்கு ஒரு செலவும் ஆகிவிடாது, அதனால் அவர்களுக்கு பிரபலமான சினிமாக்காரர்களும், அரசியல் மற்றும் அரசாங்க
பிரமுகர்களும் விழாக்களுக்கு வந்து அதை ஒரு செய்தியாக்கி கல்லூரிக்கு விளம்பரம் தருகின்றனர். திருச்சிக்கு இந்த செலிப்ரிட்டிகள் வருவதென்றால், பிரயாணச் செலவு, தங்குவதற்கு செலவு என்று பல செலவுகள் உள்ளதால், நமது Festember விழா நடத்த மிகுந்த செலவு செய்ய வேண்டியுள்ளதாகவும், ஐஐடி மற்றும் அண்ணா பல்கலை போன்று நமது பழம் மாணவர்கள் அவ்வளவாக உதவுவதில்லை என்றும் தற்போதைய மாணவர்கள் அங்கலாய்க்கிறார்களாம். பழைய மாணவர்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவுவார்கள், எளிய மாணவர்களின் படிப்பிற்கு உதவுவார்கள், ஏன் நன்றாகப் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும்படி ஒரு பாண்டித்தியம் அளிக்க முன்வருவார்கள், ஆனால் Festember போன்ற ஒரு கூத்திற்கு காசு கொடுப்பார்களா என்பதில் எனக்கு சந்தேகம்தான்.

அது போக, பழைய கல்லூரி நண்பர்கள் எங்கு எப்படி இருக்கிறார்கள் என்றும், BArch பொன்னம்மா எப்படி அலங்காரியாக மிதந்து வந்துபோனாள் என்பது பற்றியும் (வேறு யார்) விஜி ஒரு அப்டேட் செய்தாள். நமது பமீளா பார்க்க வந்து பறந்து சென்றதைப்பற்றியும் ஒரு அசை போட்டாள். குழந்தைகளைபற்றியும் பேச்சு திரும்பியது. தங்களது மக்களைப் பற்றி மட்டுமில்லாமல், வீணா, மீனாட்சி, சாதனா, கிக்கர் என்று பலரின் வாரிசுகளைப் பற்றியும் நல்லபடியாகப் பேச்சு சுற்றிவந்தது.
அடுத்தமுறை வரும் போது கண்டிப்பாக குடும்பச் சூழலில் சந்திக்கவேண்டும் (ஒருவரது இல்லத்தில்) என்று புரியும்படியாக பலமுறை விஜியும் சுபியும் சொல்லிவிட்டார்கள். கண்டிப்பாக முயற்சிப்போம்.

அன்று இரவே இசை, கவின், பிரபாவுடன் நான் மதுரைக்குச் சென்றுவிட்டேன். சந்தித்து இரண்டு ஆண்டுகள் ஆகியபடியால், நானும் எனது அப்பாவும் அம்மாவும் விமான நிலையத்திலிருந்து வீட்டுக்குப் போவதற்குள் எத்தனையோ செய்திகளைப் பேசிவிட்டோம். வீட்டிற்கு வந்து இன்னும் நிறைய கதைகளைக் கேட்டும் கூறியும் கடைசியில் தூங்குவதற்கு (காலை) ஒரு மணிக்கும் மேல் ஆகிவிட்டது.

மதுரை, தி. சுப்புலாபுரம், சத்திரப்பட்டி, குற்றாலம், கல்லணை, திருச்சி விவரங்கள் இனி ...

1 comment:

  1. ஒரு முக்கிய செய்தியை விட்டுவிட்டதாக எனக்கு இ-மெயில் இணர்எரிகளை (flames) விஜி அனுப்பியிருக்கிறாள். நல்லவேளையாக சுபி அனுப்பவில்லை, இல்லையென்றால் அவை இ-மெயில் குண்டுகளாக இருந்திருக்கும். அதிசயம் ஆனால் உண்மை, ஒரு மாறுதலுக்கு இவள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது!

    நாங்கள் அந்த யூத் காப்பி கடையில் பேசிக்கொண்டிருக்கும் போது சுபி சாதரணமாக அவள் ஒரு கவிதை எழுதியதாகவும் அதை கவிஞர் வைரமுத்து படித்துவிட்டு பாராட்டியதாகவும் குறிப்பிட்டாள். இது சுபியின் மாமியாரின் மறைவிற்கு சுபி மணம் விட்டு உள்ளத்தில் இருந்த உணர்வுகளை சொற்களாகக் கீறிய குறும் பாடல். அதற்கு சிலநாட்களுக்கு முன் தான் வைரமுத்துவின் நூல் ஒன்றினைப் படித்திருந்ததால், அன்று கவியரசின் ஆக்கபூர்வமான விமர்சனத்தையும் ஊக்குவிப்பையும் கேட்டு மெய்சிலிர்த்துப் போயிருக்கும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமுமில்லை. சுபியின் மாமனாரும், கணவரும் இவளைப் பாராட்டிக் கவிஞரிடம் அவளது கவிதை/கட்டுரை ஆர்வங்களைப் பெருமையோடு கூறினார்களாம். ஹும்ம்ம்... இப்போது இப்படி, 15 ஆண்டுகளுக்கு முன் திருமணமான புதிதில் எப்படியோ. :)

    கவிஞர் வைரமுத்து என்றதும் எனக்கு நினைவுக்கு வருவது பல ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு அறக்கட்டளை நடத்திய தமிழ் விழாவில் பேசும்போது, ஜீன்ஸ் படத்தை இந்தியில் மொழியாக்கம் செய்யும்போது, அதில் வரும் பாடல்களின் பொருள் தெரியாமல் "literal translation" செய்துவிட்டாராம் இந்திப்படப் பாடலாசிரியர். அதைப் பற்றி கவிஞர் பேசியது நினைவிற்கு வருகிறது. "ஒற்றைக்காலிலே பூக்கள் நிற்பது உன் கூந்தலில்..." என்பது இந்தி கவிஞருக்கு நம்மூரில் ஒருகாலில் நிற்பது என்பது பற்று ஒரு வகுப்பே எடுக்க விளைந்ததைப் பற்றி சுவராசியமாகப் பேசினார் வைரமுத்து.

    சுபி உள்ளத்திலிருந்ததை எழுதினாள் என்று இங்கு எழுதும்போது எனக்கு சாலமன் பாப்பையா அவர்கள் உண்மை பற்றி கூறியது ஞாபகம் வருகிறது. உண்மை என்பது உள்ளத்திலிருந்து வருவது, அதாவது உள்ளத்திடம் மறைக்கமுடியாதது. அது வாயில் பிறருக்கு தீங்கிழைக்காத படியாக வரும்போது, அதை வாய்மை என்று சொல்லுவோம். அப்படிச் சொல்லும்போது கேட்பவரைத்தவிர அருகில் இருப்போர் ஏதாவது சொல்லிவிடாமல் உடலை அசைத்தும் கண்னைச் சிமிட்டியும் பேசுவது மெய்ம்மை ஆகிறது. உதாரணத்திற்கு ஒரு செய்தியைச் சொல்லலாம்: ஒரு கலவரத்தின் போது ஒரு சிறுவன் முதியவர் ஒருவரின் வீட்டில் அடைக்கலம் ஆகிறான், அவனைத் துரத்திக்கொண்டு ஒரு ரவுடிக்கும்பல் வருகிறது. முதியவரின் உள்ளத்திற்குத் தெரியும் சிறுவன் வீட்டில் இருக்கிறான் என்று, அவர் அந்த ரவுடிகளிடம் சொல்லுவது அச்சிறுவன் கத்திக்கொண்டு வீதியில் ஓடிக்கொண்டிருந்தான் என்று. இதை உள்ளிருந்து வந்த மூதட்டிமட்டும் உணரும்படியாக தன் உடலால் ரகசிய சிமிக்ஞை செய்துகொண்டே வாய்மை பேசுவார்.

    ஆகட்டும், இந்த விபரங்கள் சுபியின் இ-மெயில் குண்டுகளிலிருந்து என்னைக் காப்பாற்றும் என்று எனக்கு நம்பிக்கையில்லை. இருந்தாலும் எழுத்தைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் இங்கிருந்துகொண்டு.

    ReplyDelete